home loans

Manaosai 3

simplecaddy

Your cart is empty

Who's Online

We have 24 guests online
கலை வளர்க்கும் பூனைகள் PDF Print E-mail
Literatur - சிறுகதைகள்
Written by சந்திரவதனா   
Monday, 20 July 2009 05:06
மண்டபம் நிறைந்திருந்தது. மேடையில் பரதம் நர்த்தனமாடியது. இளவட்டங்கள் கதிரைகளில் இருக்காமல் மண்டபத்தின் சுவரோரமாக நின்று நர்த்தனத்தையோ அல்லது நர்த்தகிகளையோ ரசித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் இருக்கைகளை விட்டெழுந்து அங்குமிங்குமாக ஓடிக் கொண்டு திரிந்தார்கள்.

சுந்தரேசர் இந்தக் களேபரங்களுக்குள் மண்டபத்துள் அடங்கிப் போய் விடாமல் வெளியிலே நின்றார். அவர் அப்படித்தான். மண்டபத்துள் மனைவியின் அருகில் உட்கார்ந்து நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விட வெளியில் பெரியமனுசத் தோரணையுடன் கன்ரீனிலோ... கசட் விற்கும் இடங்களிலோ... நின்றால்தான் நடனமாடி விட்டுப் போகும் பெண்களுடனோ அல்லது வெளியில் கன்ரீனில் சிற்றுண்டி வாங்க வரும் பெண்களுடனோ இரண்டு பகிடி விட்டுச் சிரிக்கலாம் என்பது அவருக்கு நன்கு தெரியும்.

அவர் இந்த விடயத்தில் படுகில்லாடி. இதொன்றும் அவரது மனைவி கோமதிக்குத் தெரியாமலில்லை. இளவயதிலேயே அவர் சபலபுத்திக்காரன்தான். கிளி மாதிரி அழகிய மனைவி கோமதியைப் பக்கத்தில் வைத்து விட்டுக் காகங்களைத் தேடிப் போய் வருவதில் அவருக்கு அலாதி திருப்தி. இளமையில்தான் அப்படியென்றால் இப்போ வயசு ஐம்பதைத் தொட்ட பின்னும் நரைத்த மீசையை மளிச்சு விட்டுக் கொண்டு அலையோ அலை என்று அவர் அலைவதைப் பார்க்க கோமதிக்குப் பொல்லாத எரிச்சல் வரும்.

கோமதி சில சமயங்களில் மனசு பொறுக்காமல் "கலியாண வயசிலை பிள்ளையளை வைச்சுக் கொண்டு என்னப்பா கூத்தடிக்கிறிங்கள்..! கொஞ்சம் கூட வெக்கமாயில்லையோ உங்களுக்கு..?" என்று பேசுவாள்.

"உனக்கு விசரடி! நான் ஒண்டும் நீ நினைக்கிற மாதிரி நடக்கேல்லை..!" என்று கத்தி விட்டு, அவர் தன் வேலையை அலுக்காமல் சலிக்காமல் ஒவ்வொரு தமிழ் நிகழ்ச்சிகளிலும் தொடருவார். தன்ரை வயசுக்கு தன்னை யாரும் சந்தேகப் பட மாட்டார்கள் என்பதில் அவருக்கு அபார நம்பிக்கை.

அவரின் கெட்டித்தனம் என்னவென்றால் யார் யாருக்கெல்லாம் பருவ வயதில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் தனக்கு நட்பாக்கி விடுவார். அவர்களிடம் "அண்ணை நீங்கள்தான் எல்லாம்" என்பது மாதிரி நடந்து கொள்வார். அவர்கள் தன்னை விட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் ஒரு அண்ணை போட்டு, பணிவு காட்டி மடக்கி விடுவார்.

அடுத்தது, புதிதாகத் திருமணத்துக்கென யாருக்காவது பெண் வந்தால் போதும். ஏதாவதொன்றைச் சாட்டிக் கொண்டு எடுத்ததுக்கெல்லாம் அவர்கள் வீட்டுக்குத்தான் ஓடுவார். போயிருந்து அந்த வீட்டுப் பெண்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதில் அவருக்கு அளவுக்கதிகமான ஆர்வம். அதற்காகவே அழகான பெண்கள், இளம் மனைவியர் இருக்கிற வீட்டு ஆண்களுடன் எல்லாம் அருமையான நண்பன் போல அழகாக நடிப்பார். அந்தப் பெண்களின் கண்களுக்கு அவர்கள் கணவன்மார்களை விடத் தான்தான் அழகாகத் தெரிவேன் என்பது அவரது முழுநம்பிக்கையும். அவருக்குத் தன்னம்பிக்கை மிக அதிகம்.

இன்றும் கோமதி தனியேதான் இருந்து நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நினைவுகள் மட்டும் சுந்தரேசரோடு வெளியே நின்றன.

இம்முறை நிகழ்ச்சிக்கான மண்டபமும் அதற்குரிய கன்ரீனும் சுந்தரேசருக்கு மிகவும் வசதியாகவே அமைந்து விட்டது. வழமையான மண்டபங்களில் போல் வெளியாக இல்லாமல் கன்ரீனும் ஒரு அறையினுள். அதை அறையென்று சொல்வதை விட இருந்து சாப்பிடுவதற்கான இடமும் சேர்த்து பெரிதாகக் கட்டப் பட்டிருந்ததால், ஹோல் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். அந்த ஹோலின் ஒரு மூலையை சேலைகளாலும் திரைச்சீலைகளாலும் மூடி மறைத்துத்தான் நிகழ்ச்சி தரும் பெண்கள் உடை மாற்றுவதற்கான அறை தற்காலிகமாகத் தயாரிக்கப் பட்டிருந்தது. கன்ரீனைக் கடந்துதான் அந்தத் தற்காலிக அறைக்குப் போக வேண்டும். இது போதும்தானே அவருக்கு.

ஒரேயடியாகக் கன்ரீனுக்குள் போய் பெரிய மனுசத்தோரணையுடன் ஒரு கரையாக இருந்து கதையளந்து கொண்டிருந்தார். கண்கள் மட்டும் இளம் பெண்களின் கண்களைச் சந்திப்பதிலேயே குறியாக இருந்தன. சுந்தரேசரின் வயதுக்கு யாரும் அவரைத் தப்பாக நினைக்க மாட்டார்கள். யாராவது இளம்பெடியள் கன்ரீனுக்குள் வந்தால்தான் கண்குத்திப் பாம்பாய் நின்று காவல் காப்பார்கள். இது சுந்தரேசர் போன்ற பூனைகளுக்கு வலு வசதி.

ரீன்ஏஜ்ஜில் காலடி வைக்கும் பெண் பிள்ளைகளின் பலவீனம் அவருக்கு நன்கு தெரியும். அதனால் அவர் அந்தப் பிள்ளைகளைக் கண்களால் தூண்டில் போட்டு சுலபமாக மடக்கி விடுவார். அதன் பின் அங்கிள் அங்கிள் என்று கொண்டு அந்தப் பிள்ளைகள் அவர் பின்னால் திரிவார்கள். ரீன்ஏஜ்ஜில் இருந்து வெளியே போகப் போகும் பெண்பிள்ளைகளுடன் இன்னொரு விதமான அணுகு முறை. திருமணமான இளம்பெண்கள் என்றால் கணவன்மாருக்கு எந்த வித சந்தேகமும் ஏற்படாத வகையில் வேறொரு விதமான அணுகுமுறை.

திருமணமான பெண்களின் முன், பெண்கள் கஷ்டப்பட்டாலே அவருக்கு மனசு தாங்காது என்பது போல அவர் நடத்தும் நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. வீட்டில் கோமதியையே எல்லா வேலைகளையும் செய்ய விட்டு விட்டு ஊர் சுற்றும் அவர், மற்றைய பெண்களின் கணவன்மாருக்கு, பெண்டாட்டிக்கு உதவிகள் செய்யும் படி புத்திமதி சொல்வார். இதனால் இதெல்லாம் அவரது நடிப்பு என்று தெரியாமலே அந்தப் பெண்கள் இவர் மேல் மதிப்பும் பிரியமும் வைத்து விடுவார்கள்.

மொத்தத்தில் அவர் உலகமறிந்த, உளவியல் புத்தகங்கள் எல்லாம் வாசித்து பெண்களின் பலவீனங்களைக் கற்றறிந்த புத்திசாலித்தனமான பூனை.

கோமதிக்கு வெளியில் சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத அவஸ்தை. எல்லாவற்றையும் விட்டிட்டு எங்காவது ஓடி விடுவோமா என்ற எரிச்சலான எண்ணம் அவளுள் அடிக்கடி எழும். ஆனால் ஓடிப் போனால் சுந்தரேசர் கதையை எப்படித் திருப்புவார் என்பதும் அவளுக்குத் தெரியும். சுந்தரேசர் சொல்வதைத்தான் ஊர் நம்பும். கோமதி வெளிநாட்டு மோகத்தில் கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் காற்றில் வீசி விட்டு ஓடி விட்டாள் என்றுதான் சமூகம் சொல்லும். அதனால் புயல் வீசும் மனசைப் பொறுமையால் காத்தாள். கோமதியின் இந்த ஊர் உலகத்துக்குப் பயந்த தன்மை கூட சுந்தரேசருக்குச் சாதகமாகவே அமைந்து விட்டது.

கோமதி மன உளைச்சலுடன் நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திரை மூடப்பட்டு "15 நிமிட இடைவேளை" அறிவிக்கப் பட்டது. எழுந்து வெளியில் போனாள். கன்ரீனுள் அவளுக்கு முன்னமே வெளியில் போய் விட்ட பெண்களும், ஆண்களும் குவிந்து நின்றார்கள். ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்ததால் கோமதியும் கும்பலோடு கும்பலாக கன்ரீன் முன் நின்றாள்.

சுந்தரேசர் இவளைக் கவனியாது மிகவும் சந்தோசமாக பிரசங்கம் வைத்துக் கொண்டிருந்தார். "எங்கடை கலையும் கலாச்சாரமும் அழியாமல் இருக்கோணுமெண்டால் நாங்கள் அடிக்கடி கலை நிகழ்ச்சிகள் வைக்க வேணும். எங்கடை கலையையும் கலாச்சாரத்தையும் வளர்க்க வேண்டியது தமிழர்களாகிய எங்களின்ரை கடமை... இந்த நிகழ்ச்சியோடை நாங்கள் ஓய்ந்து போகக் கூடாது. முந்தி மாதிரி இப்பவெல்லாம் தமிழ் நிகழ்சிகளுக்கு வாற ஆக்களின்ரை தொகை குறைஞ்சு போட்டுதெண்டாலும் நாங்கள் ஓய்ந்து போகக் கூடாது. எங்கடை கலையை அழிய விடக்கூடாது. அடுத்த மாதம் அந்த நகரத்திலை.. அதற்கடுத்த மாதம் மற்றைய நகரத்திலை... எண்டு எல்லா இடங்களிலையும் நடத்தோணும். உங்களுக்கு நிகழ்ச்சிகள் கிடைக்கிறது கஸ்டம் எண்டால் என்னட்டைச் சொல்லுங்கோ. நான் டான்ஸ் ரீச்சர்மாரோடை கதைச்சு உங்களுக்கு நிகழ்ச்சி எடுத்துத் தாறன்."

கோமதி எட்டிப் பார்த்தாள்.

கொஞ்சப் பேர் வாயைப்பிளந்தபடி அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சுந்தரேசரின் வாய் பேசிக் கொண்டிருக்க, கண்களோ ஒரு டான்ஸ் ரீச்சரையும், பிள்ளைகளையும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

கோமதி ஒரு மாதிரி தண்ணீரை வேண்டிக் கொண்டு வந்து தள்ளி நின்று கூட்டத்தைப் பார்த்தாள். நிகழ்ச்சி தரும் பிள்ளைகளை விட்டால் இளம்பிள்ளைகள் என்று சொல்லிக் கொள்ள மிகவும் சொற்பமானவர்களே நின்றார்கள். மிச்சமெல்லாம் வயது வந்தவர்கள்.

கலை வளர்ப்பும் கலாச்சார விழாவும் யாருக்காக நடக்கிறது. சுந்தரேசர் போன்ற.. பூனைகளுக்காகவா..? எழுந்த கேள்வியோடு மீண்டும் தன் இருக்கைக்கு நகர்ந்தாள்.

சந்திரவதனா
யேர்மனி
5.3.2003

Post a Comment

CommentsNanraka irukinrathu.
Inthai kathaiyin katha nayagan pola pala kallak kalai punaikal ella nikalchikalukum varuvathu unmaiyey.

yalie
14.03.2004

posted by யாழி: 14.03.2004

Last Updated on Friday, 22 June 2018 06:42