நான் எல்லோரும் போல சாதாரணமானவள்தான்.
பருத்தித்துறையில் ஆத்தியடி என் பிறப்பிடம்.
எண்மரில் நான் இரண்டாவது.
பெண்களுள் மூத்தவள்.

படிக்கும் போது கணிதத்துறையில் புலி. உயர்தரவகுப்புகளில் எனது கணக்கிடும் வேகத்தின் காரணமாக ஆசிரியர்களால் "computer" எனப் பட்டமிட்டு செல்லமாக அழைக்கப் பட்டேன். தற்போது கணிதத் திறமையைக் காட்டக் கூடிய தளங்கள் என் வசம் இல்லை.

இத்தனை கெட்டித்தனம் இருந்தும் பிரயோககணிதம், தூயகணிதத்தில்(Algebra, Geomatry இரண்டிலும்), 100 புள்ளிகளைத் தவறாமல் பெற்றும், காதல் கண்ணை மறைத்ததால் Architect அல்லது ஒரு Engineer ஆக வரும் கனவையும், பல்கலைக்கழகம் செல்வதற்கான சந்தர்ப்பத்தையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு கல்யாணம் செய்து விட்டேன். கனவுகள் கலைந்ததில் என்னை விட அதிகமாகக் கவலைப் பட்டது எனது அப்பாவும் அம்மாவும்தான். அடுத்து எனது அண்ணன். தொடர்ந்து எனது ஆசிரியர்கள் மற்றைய சகோதரர்கள்.

திருமணத்தின் பின் தொடர்ந்து படிக்க விடுவதாகத்தான் எனது கணவர் எனது பெற்றோருக்கு வாக்குறுதி கொடுத்தர்ர். திருமணமான அடுத்தநாளே வாக்குறுதி காற்றில் பறக்க... பத்து மாதத்தில் எனது மூத்தவன் திலீபன் என் கைகளில் தவழ... எனது உலகம் வேறாகி விட்டது. நான் படிப்பைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தொடங்கிய போது எனக்கு மூன்று குழந்தைகள். செயற்பட முடியவில்லை. அவர்கள்தான் என் உலகமாகி விட்டார்கள்.

1984 இல் கணவரின் புலம் பெயர்வு. 1986 இல் மூன்று குழந்தைகளுடன் கணவரை நோக்கிய என் புலம் பெயர்வு. ஜேர்மனிய வாழ்க்கை மிகத் துயரமாய் எதிலும் ஒட்ட முடியாததாய் வதைக்க... ஊர் நினைவுகளோடு வாழ்கையில்...

1989 இல் என்னை விட 10 வயது இளைய எனது தம்பியின் வீரமரணம்.
துயரம் என்றால் என்ன என்று அப்போதுதான் உணர்ந்தேன். அவன் இழப்பில் நிறையவே பண்படுத்தப்பட்டேன்.

1993 இல் எனது மற்றைய தம்பியின் - 11 வயது இளையவன் - வீரமரணம்.
கண்ணீரை விட துயரம்தான் நிரம்பி வழிந்தது.

1997 இல் மருத்துவம் சதி செய்ய அப்பாவின் மரணம். இறுதி ஒரு கிழமையை வவுனியா வரை சென்று அப்பாவுடன் கழித்த திருப்தியில் துயரத்தைக் கழுவினேன்.

2000 இல் அண்ணனின் மரணம் (அவருக்கு அப்போ 42 வயதுதான்.) 1990 இலேயே ஷெல்லில் ஒரு காலையும், ஒரு கையின் செயற்பாட்டையும் இழந்திருந்தார். (கவிஞன்.) எதிர்பாராத அவரின் இழப்பில் சில காலங்கள் நான் எழுத மறந்து, என்னையே தொலைத்து ஏதோ ஒருவித மனஉளைச்சலுடன் வாழ்ந்தேன். துயரம் என்னைக் கொன்றது. மீண்டும் நான் நானாக.... நீண்ட காலங்கள் தேவைப்பட்டன.

எனது சந்தோசங்களாக எனது மூன்று குழந்தைகள். வளர்ந்து விட்டார்கள்.

மகன் - திலீபன். (Dipl.Betriebswirt BA, Fachrichtung Wirtschaftinformatiker)
ஜேர்மனியில் வங்கியொன்றில் உயர் பதவியில்.
மனைவி ராதிகாவுடனும் குழந்தை நதி & தீரன் உடனும் குடும்ப வாழ்க்கை.

மகள்- தீபா
லண்டனில் வங்கியொன்றில் Account & Financier.
கணவர் ராகுலனுடனும் குழந்தைகள் சிந்து & நிலாவுடனும் வாழ்க்கை.

மகன்- துமிலன். (Redakteur - Editor)
கணினித்துறை என்ஜினியரிங், புரோக்கிராமிங் என்று படிப்புகள். ஆனாலும் Journalist ஆக வருவதில் ஆர்வம் அதிகம் இருந்ததில் பத்திரிகைத்துறைக்குள் இருக்கிறான்.

கணவர் - ஓவியப் பிரியர்- Cartoon வரைவார். நாடகங்களும் எழுதுவார். தனது இளமைக்கால நினைவுகளை இங்கு பதிகிறார்.

எனது எழுத்துக்கள் பற்றி பின்னர் சொல்கிறேன்.

சந்திரவதனா


Drucken   E-Mail

Related Articles

நேர்காணல்

ஓவியம்

பால்வினை

Datenschutzerklärung

Datenschutzerklärung

கண்ணின் மணிகள்

Logout