சித்தி (உமையாம்பிகை புவனேந்திரன் 15.09.1936 - 06.09.2020)

Umaiyampikai Puvanenthiranஒவ்வொரு மரணமும் எங்களுக்கு எத்தனையோ படிப்பினைகளைத் தந்து விட்டுச் சென்றாலும், மீண்டும் ஒரு மரணம் வந்து எம்மை உலுப்பி எடுக்கும் வரை நாங்கள் அவைகளை மறந்து விடுகிறோம்.

சித்தி,
அண்ணனும், நானும், பார்த்திபனும் பிறக்கும் வரை நீங்கள் திருமணமாகாமல் குமர்ப்பிள்ளையாக அம்மாவுடன்தான் இருந்தீர்கள். அண்ணனுக்கும், எனக்கும் குளிப்பாட்டுவதிலிருந்து சாப்பாடு தந்து நித்திரையாக்குவது வரை எல்லாமே நீங்கள்தான் செய்தீர்கள். பால் கொடுப்பதற்கு மட்டுந்தான் எங்களை அம்மாவிடம் கொடுத்தீர்கள். நானும் அண்ணனும் உங்களைத்தான் „அம்மா“ என்று கூப்பிட்டோம். எங்கள் அம்மாவை நீங்கள் கூப்பிடுவது போல „அக்கா“ என்றே கூப்பிட்டோம். (அதனால் நாங்கள் தன்னை „அம்மா“ என்று கூப்பிடவில்லையே என்று அம்மா கவலைப்பட்டது வேறு விடயம்.)

இவையெல்லாம் நாங்கள் வளர்ந்த பின் அம்மா சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும்.

பார்த்திபன் பிறந்து கொஞ்ச நாட்களில் உங்களுக்கென்று பெத்தம்மா, பாட்டா கட்டிய வீட்டிற்கு நீங்கள் போய் விட்டீர்கள். அதன் பின் திருமணமாகி சித்தப்பாவுடன் மாங்குளத்துக்குச் சென்று விட்டீர்கள்.

மீண்டும் நீங்கள் மாங்குளத்திலிருந்து எமது ஊரான ஆத்தியடிக்குத் திரும்பி வந்த போது உங்களுக்கு இரு பெண்குழந்தைகள் இருந்தார்கள். நீங்கள் உங்களுக்கென்று பெத்தம்மா, பாட்டா கட்டித் தந்த வீட்டில் வாழத் தொடங்கியது எனக்கு ஓரளவு ஞாபகம். அப்போது எனக்கு ஆறேழு வயதிருக்கலாம். அல்லது இன்னும் குறைவாக இருக்கலாம்.

எங்கள் வீட்டுக் குசினியில் இருந்து பார்த்தால் உங்கள் வீட்டுக் குசினி தெரியும். இரு வீடுகளுக்கும் இடையே ஒரு ஒழுங்கைதான் இருந்தது. அல்லும் பகலும் நாங்கள் அங்கேயும், நீங்கள் இங்கேயும் என்று மாறி மாறித் திரிந்தோம். „அக்கா, அக்கா' என்ற படி பின் கேற்றைத் திறந்து கொண்டு நீங்கள் அடிக்கடி அம்மாவிடம் ஓடி வருவீர்கள்.

அப்படியொரு ஐக்கியமும் வாரப்பாடும் எங்களிடம் இருந்தது.

நீங்கள் அம்மா போல் எல்லாவற்றிற்கும் வாயை மூடிக் கொண்டு மௌனமாக இருந்து விட மாட்டீர்கள். உடனேயே உங்கள் கருத்தை அது நேர்மறையோ, எதிர்மறையோ சொல்லி விடுவீர்கள். மிகுந்த கண்டிப்பாக இருப்பீர்கள். அந்த உங்கள் குணம் எல்லோருக்கும் பிடிக்காது என்றாலும் அந்தத் துணிவையும், தன்னம்பிக்கையையும், ஒவ்வொரு விடயத்தையும் நீங்களே கையில் எடுத்துச் செயற்படும் தன்மையும் நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். நீங்கள் மிகுந்த பிரயாசி. சித்தப்பாவின் உழைப்பை மட்டும் நம்பியிராமல் எப்போதும் நீங்களும் ஏதாவது செய்து குடும்பத்தைத் தாங்கிக் கொண்டேயிருப்பீர்கள். பெண்விடுதலை பற்றி நீங்கள் எதுவுமே சொல்லாவிட்டாலும், எழுதாவிட்டாலும் உங்கள் செய்கைகள் அதைச் சொல்லும்.

அம்மாவும் நீங்களும் நிறையத் தைப்பீர்கள். அது உங்களுக்கும் அம்மாவுக்கும் பிரியமான பொழுதுபோக்குகளில் ஒன்று. உங்களுக்குத் தையலில் பூவேலையும் நன்றாக வரும். அழகழகான பூப்போட்ட தலையணி உறைகள், சட்டைகள் என்று தைப்பீர்கள். பார்க்கவே ஆசையாக இருக்கும். அம்மாவைப் போலவே நிறைய வாசிப்பீர்கள். அம்மாவைப் போலவே மிகுந்த சுத்தம். எப்போதும் கூட்டிக் கழுவி வீடெல்லாம் சுத்தமாக வைத்திருப்பீர்கள்.

எனக்குப் பத்து வயதாக இருக்கும் போது உங்களுக்கு மூன்றாவது குழந்தையாக லோகா பிறந்தாள். சில மாதங்களில் எங்கள் தம்பி மொறிசும்(பரதன்) பிறந்தான். நான் பாடசாலையால் வீட்டுக்கு வந்தால் மொறிஸ்(பரதன்) எப்போதும் என் இடுப்பில்தான். நான் அவனை இடுப்பில் வைத்துக் கொண்டு உங்கள் வீட்டுக்கோ, பெத்தம்மா பாட்டா வீட்டுக்கோ வந்து விடுவேன். உங்கள் வீட்டில் நான் நிற்கும் போது மொறிஸ்(பரதன்) அழுதாலோ, பால் கேட்டாலோ உங்களிடம் ஒரு தயக்கமும் இராது. உடனே அவனைத் தூக்கி மடியில் வைத்துப் பால் கொடுக்கத் தொடங்கி விடுவீர்கள். அப்படியொரு உறவு எங்களிடம் இருந்தது.

காலம் எப்போதும் எங்களுக்குச் சார்பாக நின்று விடுவதில்லைத்தானே. நான்காவதாக உங்கள் மகன் சேகர் பிறந்த போது எவ்வளவு மகிழ்வாக இருந்தீர்கள். ஆனால் அதன் பின்னான ஒரு பொழுதில் நீங்ள் மீண்டும் குடும்பத்துடன் மாங்குளத்துக்குப் போய் விட்டீர்கள்.

அப்படியே காலங்கள் போய், ஒவ்வொருவர் ஒவ்வொரு திக்காய்ப் பறந்த பின், அம்மாவும் தொடர்ந்து நீங்களும் ஜேர்மனிக்கு வந்து விட்டது பெரும் சந்தோசம். இருந்தும் உங்களை அடிக்கடி அடிக்கடி சந்திப்பதற்கான வாய்ப்பை இந்தக் காலம் எனக்குத் தரவேயில்லை. அவ்வப்போதுதான் சந்தித்தோம். கதைத்தோம். சிரித்தோம்.

எப்பொதாவது நாம் சந்தித்த பின் மீண்டும் சந்திப்பதற்கான கால இடைவெளியில், தொலைபேசியில் கதைக்கும் பொழுதுகளில் நீங்கள் மிகுந்த மனவருத்தத்துடன் „மேனை வதனா, நீ இங்காலை வாறதேயில்லை' என்பீர்கள். காலமும் நேரமும் கூடி வரும். வருவேன், சந்திப்பேன், சந்தோசிப்பேன் என்றுதான் காத்திருந்தேன். இவ்வளவு அவசரமாகப் போய் விடுவீர்கள் என்று நான் நினைக்கவேயில்லை.

ஆனால் இப்போது எல்லாவற்றையும் நினைத்துக் கொண்டே திரிகிறேன் சித்தி. நீங்கள், அந்த ஆத்தியடி வீடு, அங்கு நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை, வெளிக்கிட்டுக் கொண்டு போனால் உங்களிடம் தெரியும் அந்த அழகு, மிடுக்கு, ஸ்ரைல்...

உங்கள் மகள் வதனா
(சந்திரவதனா செல்வகுமாரன்)

Drucken   E-Mail

Related Articles

நினைவழியா நாட்கள் (மொறிஸ்)

Yaar Manathil Yaar... Chandravathanaa

காஸ்ரோ

`மே´ மாதம்